செவ்வாய், 1 செப்டம்பர், 2020

சந்நிதியான்


செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா 01.09.2020 அன்று இடம்பெற்றது. கொரோனா இடர்க்காலத்திற்குப் பின்னர் நடைபெற்ற திருவிழாவில் தாகசாந்தி, அன்னதானம், காவடி முதலான நேர்த்திக்கடன்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சந்நிதியான் தேர்த்திருவிழா நடைபெற்று நிறைவுபெற்றது. 

படங்கள் : துவாரகன் 

சனி, 18 ஜனவரி, 2020

தொண்டைமானாறு சுவரோவியங்கள்
நாட்டை அழகுபடுத்துவோம் என்ற ஜனாதிபதியின் புதிய திட்டத்திற்கு அமைவாக அதிகமான நகரங்கள் வண்ணமாகி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் வடமராட்சியின் தொண்டைமானாறு நகரச் சுவர்களையும் அவ்வூர் சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அழகுபடுத்தி வருகின்றனர். 

"நண்பர்கள் வட்டம்" என்ற பெயரில் ஒன்றிணைந்து "ஊர்கூடிப் படம் வரைவோம்" என்ற கோசத்துடன் அவர்கள் அழகுபடுத்தி வரைந்த சுவரோவியங்கள் மறந்துபோன பண்பாட்டம்சம் சார்ந்தவையாகவும் மற்றும் புராண வரலாறு சார்ந்தவையாகவும் சமூக விழிப்புணர்வு சார்ந்தவையாகவும் அமைந்துள்ளன. அவற்றுள் மண்ணெண்ணெய் வண்டில், கிட்டிபுள் விளையாட்டு, சிலம்பாட்டம், இராணவன், உலகமயமாக்கலில் பூமியின் அழிவும் மனிதனின் அழிவும், இளைஞர்களின் முயற்சிகளுக்கு தடையாகும் சமூக வலைத்தளங்கள், மதுபாவனையின் தாக்கம் முதலானவற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
ஞாயிறு, 21 ஜூலை, 2019

கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்மயிலன் சின்னத்தம்பி நினைவு வெளியீடு
‘இராசமணி இல்லம்’ கெருடாவில் தெற்கு,
தொண்டைமனாறு.
2008

-------------

நூல் விபரம்

நூல் :- கிராமத்து வாசம் (குழந்தைப் பாடல்கள்)
தொகுப்பாசிரியர் :- சு. குணேஸ்வரன்
பதிப்பு :- 13-12-2008
வெளியீட்டாளர் :- திரு திருமதி சாந்தரூபன் ஞானகலை
‘இராசமணி இல்லம்’ கெருடாவில் தெற்கு
தொண்டைமனாறு.
அச்சிட்டோர் :- மதுரன் கிராபிக்ஸ், அல்வாய்.
முன் அட்டை :- இளம் ஓவியர் வாசனின் கலையாக்க வழிகாட்டலில்
மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்
குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘வெருட்டி’ களில் இருந்து
‘விரும்பி’ கள்
நன்றி :- www. Thirdeye.com
சமர்ப்பணம்

உழைப்பால் உயர்ந்த
எங்கள் ஐயாவே!

உன்னவளும் உன்னோடு
கூட உழைத்தாள்
புட்டவித்து கறிசமைத்து
மூடற் பெட்டிக்குள் வைத்து
கேணித்தோட்ட வரம்பால்
நடந்து வந்தாள்
அப்போதும்...
நீ உன் தோட்டத்துள் நின்றாய்!

திரைகடல் ஓடித்
திரவியம் தேடிய மைந்தரால்
நீ நன்றாய் இருந்தாய்
பாதிவழியில் பறிகொடுத்த பொருளைப்போல்…
நாம் உன்னைப் பறிகொடுத்தோமே!

நீளும் உன் நினைவுடன்…
இந்நூல் உனக்கு சமர்ப்பணம்.
---------------------------------------


உள்ளே

1. அம்மாவின் அன்பு - க. வேந்தனார்
2. சாப்பிட வா - சாரணா கய்யூம்
3. அம்மா அப்பா பாவம் - ச. வே பஞ்சாட்சரம்
4. தாத்தா - குறமகள்
5. பாட்டி அழுகிறாள் - கனக செந்திநாதன்
6. கோழிக்குஞ்சு - ந. கிருஷ்ணராசா
7. பட்டணம் போன பூனை - மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தன்
8. பச்சைக்கிளி - ஆடலிறை
9. பட்டாம் பூச்சி - மனோ பற்குணம்
10. பலூன் - க. வீரகத்தி
11. பட்டம் - வேலு
12. தவளைக் கூத்து - திமிலைத்துமிலன்
13. ஆமையாரின் வீடு - சேந்தன்
14. புக்கு புக்கு - மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தன்
15. ஏண்டி குட்டி -
16. சிங்கிலி நோனா -
17. கடலை வாங்குவோம் - ஆடலிறை
18. எலியும் முயலும் செய்த தோட்டம் - மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தன்
19. கத்தரி வெருளி - நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
20. தில்லை நடனம் - மு. பொன்னம்பலம்
21. ஒன்று பட்டால் - மு. பொன்னம்பலம்
----------------------------------------------------

தொகுப்பாசிரியர் எண்ணத்திலிருந்து

கிராமத்து வாசம் எனும் மகுடத்தில் அமைந்துள்ள குழந்தைப் பாடல்கள் அமரர் ம. சின்னத்தம்பி அவர்களின் நினைவு வெளியீடாக அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகின்றது.

ஈழத்தில் முதல்முதலாக 1935 இல் வடமாநில கல்வி அதிகாரியாக இருந்த க. அருள்நந்தி அவர்களின் பெருமுயற்சியில் குழந்தைப்பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பிள்ளைப்பாட்டு’ என்ற தொகுதியாக வெளிவந்தது. இன்றுவரையும் குழந்தை இலக்கியத்தின்பால் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்களால் இவ்வாறான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மிகக் குறுகிய கால இடைவெளியில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட சில பாடல்களே சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பின்போது பாடல்களின் ஓசைநயமும், எளிமையும், சிறுவர்களுக்கான மகிழ்ச்சியுமே கருத்திற் கொள்ளப்பட்டன. இது ஒரு சிறு முயற்சிதான். இதுபோன்ற பயனுள்ள பணிகள் தொடரவேண்டும்.

பாடல்களை எழுதியிருந்த கவிஞர்களுக்கும் அவற்றை வெளியிட்ட வெளியீட்டாளர்களுக்கும் முன் அட்டைக்கான படத்தினைப் பெற உதவிய ‘மூன்றாவது கண்’ இணைய இதழின் ஆசிரியர் அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட மதுரன் கிறாபிக்ஸ் நிறுவனத்தினருக்கும் எம் நன்றி.

‘கிராமத்து வாசம்’ பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

‘தினைப்புனம்’ சு. குணேஸ்வரன்
மயிலிட்டி மின்னஞ்சல் :- mskwaran@yahoo.com
அல்வாய்.
10.12.2008
---------------

வெளியீட்டாளர் எண்ணத்திலிருந்து

எமது குடும்ப விளக்கு ஐயா ம. சின்னத்தம்பி அவர்களின் மறைவின் நினைவாக இந்நூலை வெளியிடுகின்றோம். அன்னாரின் நினைவினை முன்னிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தொகுப்பு பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பயன்படும் என்று நினைக்கின்றோம்.

நாம் கேட்டவுடன் குறுகிய சில நாட்களில் இத்தொகுப்பு வேலையினைப் பெறுப்பேற்றுச் செய்து தந்த ஆசிரியர் திரு சு. குணேஸ்வரன் (யா/அம்பன் அ. மி. த. க. பாடசாலை) அவர்களுக்கும் கவிதைகளை எழுதியிருந்த கவிஞர்களுக்கும் எம் உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மிக அழகாக அச்சிட்ட மதுரன் கிறாபிக்ஸ சு. மகேஸ்வரன் அவர்களுக்கும் இவ்வாறான தொகுப்பினைச் செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்திய திரு வே. பரமானந்தம் அவர்களுக்கும் இம்முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் வெளியீட்டாளர் என்ற வகையில் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலைப் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதன் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறோம்.


‘இராசமணி இல்லம்’ திரு திருமதி சாந்தரூபன் ஞானகலை
கெருடாவில் தெற்கு
தொண்டைமனாறு.
10.12.2008
--------------

அம்மாவின் அன்பு
- க. வேந்தனார்

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.

--------------------------------------------

சாப்பிடவா
- சாரணா கய்யூம்

சின்னக் கண்ணே சாப்பிடவா
சிங்காரக் கண்ணே சாப்பிடவா

வண்ணக் கிளியே சாப்பிடவா
வான வில்லே சாப்பிடவா

கிண்ணம் நிறையச் சோறுண்டு
கிள்ளை மொழியே சாப்பிடவா

எண்ணம் நிறைய ஆசையுண்டு
இனிய அமுதைச் சாப்பிடவா

பவளம் போன்ற வாயாலே
பேசிப் பேசிச் சாப்பிடவா

தவழும் உன்றன் கால்களினால்
தத்தி வந்து சாப்பிடவா.

--------------------------------------------

அம்மா அப்பா பாவம்
- ச. வே பஞ்சாட்சரம்

அப்பா அம்மா பாடுபட்டே
அன்பாய் அனைத்தும் தருகிறார்
அப்பா அம்மா பாவம் முதுமை
அதிலும் அன்பாய்ப் பேணுவோம்

அப்பா அம்மா சுமந்து உலைந்தே
அல்லல் நோய்கள் தீர்க்கிறார்
அப்பா அம்மா பாவம் முதுமை
அதிலும் அன்பாய்ப் பேணுவோம்

அப்பா அம்மா படிப்புத் தந்தும்
அடையத் தொழிலும் வைக்கிறார்
அப்பா அம்மா பாவம் முதுமை
அதிலும் அன்பாய்ப் பேணுவோம்

அப்பா அம்மா எம்மைக் காக்க
அரிய உயிரும் விட அஞ்சார்
அப்பா அம்மா பாவம் முதுமை
அதிலும் அன்பாய்ப் பேணுவோம்

ராகம் :- நாட்டைக்குறிஞ்சி
தாளம் :- ஆதி
-------------------------

தாத்தா
- குறமகள்

தாத்தா என்தன் ஆசைத் தாத்தா
தங்க மான நேசத் தாத்தா
பார்த்தாற் பொக்கை வாய்க்குள் ளேதான்
பாக்கு வெற்றிலை குதப்பும் தாத்தா

பல்லுக் கழன்ற பொக்கை வாயாற்
பலமுத் தங்கள் கொடுக்குந் தாத்தா
பொல்லுப் பிடித்துக் குடுகு டென்னப்
போயிலை வாங்கப் போகும் தாத்தா

கட்டி அணைத்து முத்த மிட்டுக்
கதைகள் பலவுஞ் சொல்லுந் தாத்தா
விட்டி டாமல் எங்கள் பழைய
வீர மெல்லாஞ் சொல்லுந் தாத்தா

முறுக்குச் சீடை தின்ன மாட்டார்
முற்றத் திலே விடவும் மாட்டார்
தறுகு றும்பு செய்த போதுந்
தடியால் எம்மை அடிக்க மாட்டார்

ஆசைத் தாத்தா எங்கள் தாத்தா
அருமை யான நேசத் தாத்தா
பாச மெல்லாம் எங்கள் மீதே
பதித்து எம்மை வளர்க்குந் தாத்தா.

---------------------------------------------------------------------

பாட்டி அழுகின்றாள்
- கனக செந்திநாதன்

சிறிய பூச்சி பிடிக்கவே
பெரிய பல்லி ஊர்ந்தது

பெரிய பல்லி பிடிக்கவே
காpய பூனை பதுங்கிற்று

கரிய பூனை பிடிக்கவே
வெள்ளை நாயும் பாய்ந்தது

வெள்ளை நாயைத் துரத்தவே
மெள்ளப் பாட்டி எறிந்தனள்

பாட்டி எறிந்த தடியினால்
பானை சட்டி உடைந்ததே

காட்டிக் காட்டி அழுகிறாள்
கவலை தீர்ப்பார் இல்லையே.
----------------------------------------------

கோழிக்குஞ்சு
- ந. கிருஷ்ணராசா

கத்திக் கத்தி எங்கள் கோழி
பத்து முட்டை இட்டது.

பொத்திப் பொத்தி பாதுகாத்து
எட்டுக் குஞ்சு பொரித்தது.

பஞ்சுப்பந்து போலக் குஞ்சு
கொஞ்ச ஆசை வந்தது.

பெட்டிக்குள்ளே கையை வைத்தேன்
எட்டிக் கொத்தி விட்டது.

எட்ட நின்று பார்த்தால் போதும்
என்ற புத்தி வந்தது.

-------------------------------

பட்டணம் போன பூனை
- மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தன்

பட்டணம் போன பூனையாரே
பார்த்து வந்த காட்சி யென்ன

ஏழுநிலை மாடிகளில்
எதற்குமே கூரையில்லை
வாழுமெலி ஒன்றில்லை
வயிறொட்டி வந்தே னையா.

அடுக்களையிற் பாலில்லை
அங்கங்கே போத்திலிலே
அடைத்திருப்பார் நக்கவுமோர்
அரைச் சொட்டுக் கிடைக்கவில்லை.

சட்டியிலே மீனில்லை
சாத்தி வைப்பார் குளிரூட்டும்
பெட்டியிலே பிறகென்ன
பிடிக்கவில்லை பட்டணந்தான்.

அரணாகக் கோட்டைகளாம்
அதற்குள்ளே விசிறிகளாம்
பரணொன்று கிடைக்கவில்லை
பாழ்பட்ட பட்டணத்தில்

பையன்களும் துரத்துகிறார்
பாழ்பட்ட பட்டணத்தில்
பையவே ஓடிவந்தேன்
படுத்திருந்த பரணுக்கே

--------------------------------------------------

பச்சைக் கிளி
- ஆடலிறை

பச்சைக் கிளிதான் பறந்து வந்து
பாட்டுப் பாடுது
இச்சைக் கினிய கதைகள் கூறி
இதயம் கவருது
அச்ச மின்றித் தோளில் அமர்ந்து
மழலை கூறுது
மிச்ச மின்றிக் கோவைப்பழங்கள்
தின்று தீர்க்குது
உச்சிக் கொப்பில் பறந்தே ஏறித்
தூங்கிக் கிடக்கிது.

----------------------------------------

பட்டாம் பூச்சி
- மனோ பற்குணம்

பட்டாம் பூச்சி பற பற
பாடிப் பாடி பற பற
சிட்டாய் நீ பற பற
சிற கடித்துப் பற பற

பூமேலே பற பற
பூரிப்போடு பற பற
காலைத் தேடிப் பற பற
கல கலப்பாய்ப் பற பற

நிறம் கற்க பற பற
நீலம் மஞ்சள் சிகப்பு ஊதா
கறுப்பு வெள்ளை நாவலென
காட்டித் தரப் பற பற

ஒன்றாய்ச் சேர்ந்து பற பற
ஒற்றுமையாய்ப் பற பற
நன்றாய்ப் பார்க்கப்; பற பற
நாம் படிக்கப் பற பற
-----------------------------------

பலூன்
- க. வீரகத்தி

வண்ண வண்ணப் பலூன்கள்
வடிவு கொண்ட பலூன்கள்
கண்ணை அள்ளும் பலூன்கள்
கடைகள் எங்கும் பாரீர்!

சிவப்பு நீலம் மஞ்சள்
சிறுவர்க் கான பச்சை
உவப்பு ஓங்கும் ஊதா
ஊத நிறம் ஊதும் - வண்ண

பாம்பு போலே சிலது
பறவை போலே சிலது
தேம்பி அழும் குழந்தை
திகைப் படையும் பலூன்கள் - வண்ண

பலூன்காரன் வருவான்
பாட்டி வாங்கித் தருவாள்
பள்ளித் தோழரோடு நான்
பறக்க விட்டுப் பாடுவேன் - வண்ண

வாயில் வைத்து ஊதி
வான வெளியில் விட்டால்
பாயும் அங்கு மிங்கும்
பந்து போலே அடிப்பேன் - வண்ண

அளவு மிஞ்சி ஊதினேன்
அது வெடித்துப் போச்சுதே
அழகில் மிக்க ஆசை
அடடா அதுவே தீமை. - வண்ண
------------------------------------
பட்டம்
- வேலு

சின்னச் சின்னப் பட்டமாம்
சிங்காரப் பட்டமாம்
அண்ணன் செய்த பட்டமாம்
அருமையான பட்டமாம்

வட்டமான பட்டமாம்
வாலிருக்கும் பட்டமாம்
கிட்டவராப் பட்டமாம்
காற்றிலாடும் பட்டமாம்

பச்சை வண்ணப் பட்டமாம்
பறக்கும் நல்ல பட்டமாம்
அச்சமின்றிக் காற்றிலே
ஆடும் நல்ல பட்டமாம்

உயரப் போகும் பட்டமாம்
ஊசலாடும் பட்டமாம்
துயரமின்றி ஆடுமாம்
துள்ளி வானில் ஓடுமாம்.
--------------------------------------------------

தவளைக் கூத்து
- திமிலைத்துமிலன்

டும் டும் மழை மழை டும் டும்
கும் கும் தவளைகள் கும் கும்

சல்லரி நான்கு மத்தள மேழு
தவிலும் சேர்ந்தே டும் டும்
மெல்லென வீங்கும் புல்லாங்குழலும்
வீணையும் சேர்ந்தே கும் கும் கும்

குப்பை மிதந்திடும் பள்ளத்தி லேயொரு
கூத்து நடக்குது தெய் தெய் தெய்
செப்பு நெருஞ்சியும் வட்;டத் தகரையும்
சீலை விரிக்குது மெய் மெய் மெய்

பச்சைத் தேரை பிடில் வாசிக்க
பனைமரத் தேரை குழலூத
மொட்டைத் தவளை நாட்டிய மாட
மோசங்கு கேட்குது ஞொய் ஞொய் ஞொய்

கொட்டும் மழையும் தாளம் போடக்
குளிரும் காற்றும் கவிபாட
பொட்டல் தரையில் தவளைகள் சேர்ந்தே
போடுது கூத்து தெய் தெய்

---------------------------------------------

ஆமையாரின் வீடு
- சேந்தன்

வீடு நல்ல வீடு
மெல்ல அசையும் வீடு
ஓடு போட்ட வீடு
உடையா தந்த வீடு

நாலு காலில் வீடு
நதியில் நீந்தும் வீடு
வாலுந் தலையும் நாலு
காலும் உள்ள வீடு

கதவு யன்னல் இல்லை
காற்று ஒளியும் இல்லை
உறவு பேசி யாரும்
உள்ளே வருவதில்லை

பெருமை பேசி உள்ளே
ஒருவர் வாழுகின்றார்
அருமையான வீடு
ஆமையாரின் வீடு.
---------------------------------------புகைவண்டி
- மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தன்

புக்குப் புக்குப்
புகையைக் கக்கி
முக்கித் தக்கி
மூசிச் செல்வன் கூ கூ கூ

நீரைக் குடிப்பன்
நெருப்பைத் தின்பன்
சேரக் கரியைத்
தேடித் தின்பன் கூ கூ கூ

மனிதர் விழுங்கி
வயிறு கொண்டு
மனிதர் கக்கும்
வலிமை யாளன் கூ கூ கூ

இட்ட நேர்மை
இரும்புப் பாதை
விட்டிறங்கா
மேன்மையாளன் கூ கூ கூ

கூவிக் கூவிக்
கூப்பிட் டெம்மைக்
காவிச் செல்லும்
கருணை யாளன் கூ கூ கூ


பட்டு வேட்டி
பாவைப் பிள்ளை
கட்டு வெடிகள்
காவிக் கொண்டு
கொழும்பி லிருந்து
கூ கூ வென்றே
எழும்ப முன்னே
எனக்குக் காலை
வந்து தீபா
வளிக்குச் சேர்ப்பன்
எந்தன் நண்பன்
என்றும் மறவேன்
---------------------------

ஏண்டி குட்டி

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய் ?
அம்மியடியில் கும்மி யடித்தேன் சும்மாவா இருந்தேன் ?

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய் ?
ஆட்டுக் குஞ்சுக்கு ஆறுதல் பண்ணினேன் சும்மாவா இருந்தேன்?

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய் ?
கோழி முட்டையிலே மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன்?

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய் ?
பாம்புக் குட்டிக்குப் பல்விளக்கினேன் சும்மாவா இருந்தேன் ?

--------------------------------------------------------------------------------

சிங்கிலி நோனா

சிங்கிலி நோனா சிங்கிலி நோனா
சீப்புக் கொண்டைக் காரி
பார்த்த பேர்கள் ஆசைப்படும்
பந்துக் கொண்டைக் காரி.

காடை கெளதாரி மைனா
வாங்கலையோ, ஆயாளு !
கட்டிப் போட்டுத் தீனைப்போட்டால்
முட்டை போடும் ஆயாளு!

சிறுக்கி தைக்கிற சின்னஊசி
வாங்கலையோ, ஆயாளு!
பிச்சுத் தைத்திட்டு மேலே போட்டால்
நல்லாயிருக்கும் ஆயாளு!
------------------------------------------


கடலை வாங்குவோம்
- ஆடலிறை

பாட்டி ஒருத்தி வீதி ஓரம்
கடலை வறுத்து விற்கிறாள்
ஓட்ட மாக வந்தி டுங்கள்
ஒன்றாய்க் கடலை வாங்குவோம்

ஓட்டை வைத்து வறுத்துக் கடலை
உடனே எமக்குத் தருகிறாள்
சூட்டை இழக்காச் சுவை மிகுந்த
கடலை வாங்கித் தின்னலாம்.

மணலைப் போட்டுக் கச்சான் கடலை
மணக்க மணக்க வறுக்கிறாள்
சுணக்க மின்றிச் சோளம் போட்டு
வெடிக்க வறுத்துத் தருகிறாள்

மஞ்சள் தூளும் உப்பும் கரைத்துக்
கொண்டற் கடலை நனைத்தவள்
மஞ்ச ளாக நல்ல கடலை
பொரித்தே எமக்குத் தருகிறாள்

கோயி லுக்கு வந்தி டாத
தம்பி தங்கை தின்றிடக்
கொண்டல் கச்சான் சோளம் எல்லாம்
வாங்கிக் கொண்டு செல்லுவோம்.

----------------------------------------------------------------எலியும் முயலும் செய்த தோட்டம்
- மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தன்

எலியும் முயலும் ஒன்றாக
இசைந்தன தோட்டம் செய்யவே.

எலியோ உழுதது தரையை
முயலோ செய்தது கரையை

பலாவின் கொட்டை தேடியே
போட்டது முயலும் பாடியே

புடலங் கொட்டை தூவினார்
எலியும் புளுகில் தாவினார்

இரவும் பகலும் இறைத்தன
வரம்பை உயர்த்தி நிறைத்தன

மாறி மாறிக் காவலாம்
மலரும் என்று ஆவலாம்

பந்தல் போட்டு விட்டன
பலாவிற் கூடு கட்டின

புடலில் நீண்டு தூங்கியது
புதிய பந்தல் தூங்கியது

பலாவில் உருண்டை முள்ளுப் போல்
படுத்திருத்ததை மெள்ளப் போய்

முயலும் வந்து கீறினார்
முள்ளம் பன்றி சீறினார்

தூங்கின நீளக் காயென்று
எலியும் புளுகில் ஆயவே

தூங்கின பாம்பு ஊரவே
துடித்துப் பறந்தார் தூரவே

எலியும் முயலுந் தோட்டம்
விட்டே எடுத்தார் ஓட்டம்.
----------------------------------------

கத்தரி வெருளி
- நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

1
கத்தரித் தோட்டத்து மத்தியில் நின்று
காவல் புரிகின்ற சேவகா – நன்று
காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார் - உன்னைப் போல்
வேலை புரிபவன் வேறுயார்?

2
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா – என்றும்
காவல் புரிகின்ற சேவகா
எண்ணி உன்னைப் போல் இரவு பகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? – என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?

3
வட்டமான பெரும் பூசினிக் காய் போல்
மஞ்சள் நிற உறுமாலைப்பார் - தலையில்
மஞ்சள் நிற உறுமாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார் - இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

4
தொட்டு முறுக்காத மீசையைப்பார் - கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார் - கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார் - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

5
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையும் கண்டதோ? – உன்றன்
பொல்லாத பார்வையும் கண்டதோ?
வாட்ட மில்லாப் பயிர் மேய வந்த பசு
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே – வெடி
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே

6
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக் கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந் தோடுமே
நள்ளிரவில் வருகள் வனுனைக் கண்டு
நடு நடுங்கி மனம் வாடுமே – ஏங்கி
நடு நடுங்கி மனம் வாடுமே

7
ஏழைக் கமக்காரன் வேலைக் குதவி செய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப் போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன் னுண்மையே – போலி
ஆவதறிந்தன் னுண்மையே

8
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்த தென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

9
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதை போல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டு காண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்று நான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்று நான்.
-----------------------------------------------------தில்லை நடனம்
- மு. பொன்னம்பலம்

கடகடக்குது மேளம்
கைகள் கொட்டுது தாளம்
படமெடுக்குது நாகம்
பாம்பு நடனம் பாரும்

மகுடி கொட்டும் நாதம்
மத்தளத்தில் மோதும்
குறவன் குறத்தி ஆடும்
கூத்துக் கொள்ளுது வேகம்

தலையில் செம்பை ஏந்தி
தாவி ஆடும் பாங்கி
கலகலக்குது சலங்கை
கரக நடனம் காணும்

கோபி யர்கள் கூடி
கொட்டுகின்றார் கும்பி
நாயகனாம் கண்ணண்
நாதம் நெளியும் நடுவில்

கடகடக்குது மேளம்
நந்தி கொட்டுது தாளம்
திமுதி முவென ஆடும்
தில்லை நடனம் பாரும்
------------------------------ஒன்றுபட்டால்
- மு. பொன்னம்பலம்

குருவி ஒன்று கூடுகட்டி
முட்டை யிட்டது
அருகில் ஒரு பாம்பு புற்றில்
பார்த்திருந்தது

ஆடிப்பாடி நாளும் குருவி
அடையும் காத்தது
பாம்பு அதன் முட்டை யுண்ணச்
சமயம் பார்த்தது

குருவி ஒருநாள் உணவு தேடி
வெளியே சென்றது
அரவு மெல்ல குருவிக்கூட்டுள்
நுழையப் போனது

காகம் ஒன்று பார்த்தே இதைக்
“காகா” என்றது
கிளிகள் இதைக் கேட்டெழுந்து
“கீகீ” என்றன

மைனாக் கூட்டம் “ஆபத்” தென்று
மொய்த்துக் கத்தின
கரிக் குருவி, காடை, கோட்டான்
திரண் டெழுந்தன !

வட்டம் இட்ட பருந்தும் கீழே
விரைந்து வந்து தன்
துட்ட குணத்தை விட்டிவைக்குத்
துணையாய் நின்றது

அத்தனையும் சேர்ந்து பாம்பைக்
கொத்தத் தொடங்கின
“ஐயோ” என்று பாம்பு கீழே
செத்து விழுந்தது !

ஒன்று கூடி பறவையினம்
பகையை வென்றது
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”
என்று பாடின.
------------------

நன்றி

ஈழத்துச் சிறுவர் பாடல் களஞ்சியம், 2007
- தொகுப்பாசிரியர் கலாநிதி செ.யோகராசா
மஞ்சு மலர்க்கொத்து, 2003
- மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன்
ஆடலிறை குழந்தைப் பாடல்கள், 2005
- ஆடலிறை
ஆடலிறை மழலைப் பாடல்கள்
- ஆடலிறை
ஊஞ்சல் ஆடுவோம்
- மு. பொன்னம்பலம்
சின்னப் பாப்பாப் பாட்டு, 2004
- ச. வே. பஞ்சாட்சரம்
நாட்டார் பாடல்கள்
- கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
-----------------------------------------------------------------

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

அல்வாய் கிரிச்சியால் அண்ணமார் வழிபடு தெய்வத்திற்கு வருடாந்த மடை 2018(படங்கள் :ஆதி) 09.08.2018

"தொன்மையானதும் பல அண்ணமார் கோயில்களின் பரவுகைக்குக் காரணமானதும் இன்னமும் மரபு வழிபாட்டு முறைகளைப் பேணுகின்றதுமான வடமாராட்சிப் பகுதி கிரிச்சியால் அண்ணமார்" - என். சண்முகலிங்கன், யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு என்ற கட்டுரையில், பண்பாடு, புரட்டாதி 1993,இந்துசமய கலாசார திணைக்கள வெளியீடு


திங்கள், 29 ஜனவரி, 2018

அல்வாய்க் கிராமத்தின் ஒரு கனவு நிறைவேறிய நாள்   அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (29.01.2018) இடம்பெற்றது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் ஆலய அடியவர்களின் ஒரு கனவாகவே இராஜகோபுர அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கடந்த ஆறு வருடங்களாக முன்னொடுக்கப்பட்ட இக்காரியம் கிராம மக்களின்,புலம்பெயர்ந்து வாழும் கிராம உறவுகளின்ஒருங்கிணைப்பில் கைகூடியுள்ளது.

அந்நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(படங்கள்: சு.குணேஸ்வரன்)